Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு அதிவேகமாக பார்வையிட்டுச் சென்றது. 15 நிமிடங்கள் மட்டுமே சேதங்களை பார்வையிட்ட குழுவினர், பயிர் சேதங்களை முழுமையாக பார்வையிடாமல் சென்றது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி 11 முதல் 14-ம் தேதி வரை பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நெல், வாழை, உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தாமிர பரணி ஆற்றங்கரையோரம் இருந்த தென்காசி, விருதுநகர், தூத்துக் குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யும் உறைகிணறு கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகம் பாதிப்படைந்தது.
மத்திய குழுவினர் வருகை
மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அரசின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குநரக இயக்குநர் மனோகரன், நிதித் துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று வந்தனர்.திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் சேதமடைந்த கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை பார்வை யிட்டனர். அங்கு, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, வெள்ளச் சேதங்களை அவர்களுக்கு விளக்கினார். அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பின், இக்குழு வினர் 15 நிமிடங்களில் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிளம்பிச் சென்றனர்.
ரூ. 6.16 கோடி சேதம்
மத்திய குழுவின் ஆய்வு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 5,839 ஹெக்டேரில் தானிய பயிர்களும், 163 ஹெக்டேரில் நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டது. இதற்காக ரூ. 6.16 கோடி நிவாரணம் அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 19 தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 18 கூட்டு குடிநீர் திட்டங்கள் சேதமடைந் திருந்தன. அவை ஒரு வாரத்துக் குள் ரூ.8.86 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, என்று தெரிவித்தார்.
மானூர் உள்ளிட்ட பகுதிகளில் தானிய பயிர்கள் பெருமளவுக்கு சேதமடைந்தன. அப்பகுதிகளுக்கு மத்திய குழு செல்லாதது விவசாயி களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிர்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று மாலை வந்தனர். இடைசெவல் சித்திரம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மானாவாரி பயிர்களை பார்வை யிட்டனர். பின்னர், எட்டயபுரம் வட்டம் குமாரகிரி மாதாபுரம், தலைகாட்டுபுரம், விளாத்திகுளம் வட்டம் கமலாபுரம், ஆற்றங்கரை சொக்கலிங்கபுரம் ஆகிய இடங்களில் கனமழையால் சேதமடைந்த மானாவாரி பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.ஒவ்வொரு இடத்திலும், சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது வருகை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த முத்துச்சாமி புரம் கிராமத்துக்கு செல்லவில்லை.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வேளாண்மை துறை இணை இயக்குநர் முகைதீன், வட்டாட்சியர்கள் மணிகண்டன், அய்யப்பன், ரகுபதி மற்றும் வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT