Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து பெண்கள் மட்டும் வழிபாடு நடத்தும் பாரம்பரிய விழா வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ளது தேவிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பவுர்ணமி அன்று இரவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிலா பெண் வழிபாடு நடைபெறுகிறது. ஒரு வாரத்திற்கு முன்னதாக ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் நிலாபெண்ணை தேர்வு செய்கின்றனர்.
தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு அந்தகிராமத்தில் உள்ள பலரும் தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுவகைகளை கோயிலில் வைத்து வழங்குகின்றனர். இந்த ஆண்டிற்கான நிலாபெண் வழிபாடு தை பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் இரவு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. முன்னதாக நிலாப்பெண்ணாக ரமேஷ், நவமணி ஆகியோரின் மகள் கனிஷ்கா(10) தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு புத்தாடை அணிவித்து, ஆவாரம் பூ மாலையிட்டு சிறுமியை ஊர் பெண்கள் அலங்கரித்தனர். சிறுமியிடம் ஆவாரம்பூக்கள் நிரம்பிய கூடையை கொடுத்து தேவிநாயக்கன்பட்டியில் உள்ள மாசடைச்சிஅம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துவந்தனர். கோயில் வளாகத்தில் சிறுமியை அமரவைத்து இரவு முழுவதும் கும்மியடித்தும், நிலா பாடல்கள் பாடியும் வழிபட்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து சிறுமிக்கு வழங்கினர்.
விடிவதற்கு முன் ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலையில் சிறுமியை தீபம் ஏற்றச்செய்து வழிபட்டனர். வழிபாட்டை முடித்துவிட்டு பவுர்ணமி நிலவு மறைவதற்குள், சூரிய உதயத்திற்கு முன்னர் நேற்று அதிகாலையில் கிராம பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இந்த விழா குறித்து கிராமத்து பெண்கள் கூறுகையில், நிலாபெண் வழிபாடு எனும் விழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. எங்கள் முன்னோர் வழிகாட்டிபடி பாரம்பரிய பழக்க வழக்கத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து விழா கொண்டாடி வருகிறோம். கிராமமக்கள் உடல் நலம்பெறவும், விவசாயம் செழிக்கவும் இந்த நிலாப் பெண் வழிபாடு நடத்தப்படுகிறது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT