Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய நிறுத்தம் நடுவட்டம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இங்குள்ள பேருந்து நிலையம் முறையான பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்தது. காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவர் காலடி வைத்த நடுவட்டம் பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மூலதன மானிய திட்டத்தின் கீழ் நடுவட்டம் பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். பேருந்து நிலையம் கட்ட டெண்டர் கோரப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டுநவம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட நிலையில், நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஒரு வழியாக கட்டுமானப்பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. ஆனால் பணிகள் மிகவும் மெத்தனமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கட்டுமானப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.மனோ ரஞ்சிதம், செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து ரா.மனோரஞ்சிதத்திடம் கேட்டபோது, ‘‘நடுவட்டம் பேருந்து நிலையத்தை புனரமைக்க ரூ.3.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 14 கடைகள் அடங்கிய வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.
டெண்டர் அறிவிக்கப்பட்டு, பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் மக்களவைத்தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் கரோனா பரவல் காரணமாக பணிகள் நிறுத்தபட்டன. தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.
பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதி தாழ்வானதாக உள்ளதால், சுமார் 100 மீட்டருக்கு தடுப்புச்சுவர் கட்டிய பின்னரே பிற கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியும். மேலும், பேருந்து நிலையத்தில் மேல்புறம் உள்ள வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால், அந்த வீடுகளை காலி செய்துள்ளோம். அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு மாற்றிடம் மற்றும் வீடு கட்டித் தரப்படும். மார்ச் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே மாதத்துக்குள் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT