Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று 72-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
விழாவில், மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 74 ஆயிரத்து 434 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்குகிறார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், ஏடிஎஸ்பி சக்திவேல், ராஜூ, டிஎஸ்பி சரவணன், கோட்டாட்சியர் கற்பகவள்ளி, வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஒத்திகை நிகழ்ச்சி
எல்லையில் சோதனை
குடியரசு தினத்தையொட்டி, காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு அரங்கம், போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.எஸ்பி உத்தரவின் பேரில், ஆந்திர, கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள கும்மாளபுரம், அந்திவாடி, ஜூஜூவாடி, கக்கானனூர், பேரிகை, நேரலகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் காளிக்கோவில், குருவிநாயனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள எல்லை சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரியில் குடியரசு தின விழா
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (26-ம் தேதி) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அரசின் பல்வேறு துறை பணியாளர்கள் உள்ளிட்ட 290 பேருக்கு சிறந்த செயல்பாட்டுக்கான நற்சான்றிதழ்களை தருமபுரி ஆட்சியர் வழங்குகிறார்.இதையொட்டி, இன்று காலை 8.05 மணிக்கு ஆட்சியர் கார்த்திகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 290 பேர் மற்றும்
2018-19-ம் ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் 10 பேருக்கு நற்சான்றிதழுடன், ஊக்கத் தொகையும் வழங்கி ஆட்சியர் கவுரவிக்கிறார்.
மேலும், தொப்பூர் கணவாயில் லாரி 13 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம், பஞ்சப்பள்ளி அருகே விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானையை உயிருடன் மீட்கும் பணி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை உயிருடன் மீட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கும் ஆட்சியர் சான்றிதழை வழங்குகிறார்.
ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா 30 நிமிடங்களில் நிறைவு பெறுகிறது. விழாவில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியில்லை. விழாவில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT