Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
தி.மலையில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் எலைட்மதுபானக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை நகரம் வேட்டவலம் பேருந்து நிறுத்தம் (காந்தி நகர் புறவழிச்சாலை சந்திப்பு) அருகே உள்ள பிரபல வணிக வளாகத்தில் எலைட் மதுபானக் கடையை நேற்று திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவ டிக்கை எடுத்தது. இதையொட்டி, உயர் ரக மதுபாட்டில்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. இதையறிந்த அந்த பகுதி மக்கள், எலைட் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பல இடங்களில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், குடியிருப்புகள் அதிகம் நிறைந்த இடத்தில் எலைட் மதுபானக் கடை திறப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, எலைட் மதுபானக் கடையை திறக்கக் கூடாது” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "எலைட் மதுபானக் கடை திறக்கக்கூடாது என்ற உங்களின் கோரிக்கையை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இதையடுத்து, சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT