Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
101-வது பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் எம்பி காளியண்ண கவுண்டரிடம், முதல்வர் பழனிசாமி அனுப்பிய கடிதத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ண கவுண்டர். முன்னாள் எம்பியான காளியண்ணன் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் இருந்தவர். அவர் நேற்று முன்தினம் தனது 101-வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
இதையொட்டி அவருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், முன்னாள் எம்பி காளியண்ணனிடம் நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் எம்பி காளியண்ணகவுண்டருக்கு விழா எடுப்பது அல்லது கவுரவப் பதவி கொடுப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். பறவைக் காய்ச்சல் தொடர்பாக 47 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடும் சோதனைக்கு பிறகே மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. கோழி இறைச்சி, முட்டைஉண்பதால் பாதிப்பு எதுவும் இல்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT