Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM
சிவகங்கை மாவட்டத்தில் தெருக்களில் பாடம் நடத்தும் உத்தரவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் மாநிலத் தலைவர் ரா.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பற்றிய புரிதல் உள்ள மேல்நிலை வகுப்பு மாணவா்களை 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, பள்ளிகளில் பாடம் நடத்த எங்கள் அமைப்பின் சார்பில் அனுமதி கேட்டோம். கரோனா அச்சத்தால் அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், கிராமங்களுக்குச் சென்று மரத்தடி அல்லது ஏதேனும் ஓரிடத்தில் மாணவர்களை தரையில் அமர வைத்துப் பாடம் நடத்த சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துகிறார்.
இதனால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.பாதுகாப்பு எச்சரிக்கையுடன் எங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கூட பள்ளிகளில் பணியாற்றத் தயாராக உள்ளோம்.
பள்ளிக்கு வெளியில் பாடம் நடத்துவதில் நடைமுறைச் சிக்கலும், பாதுகாப்பின்மையும் அதிகம்.
எனவே, ஆசிரியர்களைப் பள்ளியில் கற்பித்தல் பணி செய்ய மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவிட வேண்டும். தெருவில் போய் பாடம் நடத்த நிர்பந்தம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT