Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM
தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 4 மாணவர்களுக்கு, கல்வி செலவுக்காக தலா ரூ.25 ஆயிரம் நிதியை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் 25 பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் 2,901 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் வரவேற்றார். ரூ.1.14 கோடியில் 2,901 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் 22,688 மாண வர்களுக்கு ரூ.9 கோடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், “தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்்டின் கீழ்மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யமுனா, சுஜிதா, பவித்ரா மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந் துள்ள புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆகாஷ் ஆகிய 4 பேருக்கும் எம்எல்ஏ தூசி.கே. மோகனின் சொந்த செலவில் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.1 லட்சம் நிதியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
2 கிராமங்களில் மினி கிளினிக்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் பல்லாவரம் கிராமம் மற்றும் அனக்காவூர் ஒன்றியம் உக்கல் ஆகிய 2 கிராமங்களில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா வரவேற்றார்.அம்மா மினி கிளினிக்குகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
முன்னதாக, இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விமலா, எம்எல்ஏ தூசி.கே.மோகன், மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT