Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM

நீலகிரியில் 28 மினி கிளினிக் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

உதகை

உதகை காந்தல் துணை சுகாதார நிலையத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்தபின் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம்28 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜெகதளா துணை சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்.கைகாட்டி, உதகை காந்தல் துணை சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இவை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் செயல்படும். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர். மாவட்டத்தில் 20 கிராமப்புறங்களிலும், 5 நகர்ப்புறங்களிலும், 3 நடமாடும் மினி கிளினிக் என 28 மினி கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளன.

மினி கிளினிக்கில் சர்க்கரை பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, ரத்த மாதிரி பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலமாக 9 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்பிலான ஊட்டச்சத்து நல பரிசுப் பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் டி.வினோத், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷ் உட்படபலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x