Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த யோசனை விளக்குப்பொறியை பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, தென்னையை ஊடுருவி தாக்கும் சுருள் வெள்ளை ஈயால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘அலிரோடிக்ஸ் ரூஜியோபெர்ககு லேட்டஸ்’ என்றழைக்கப்படும் சுருள் வெள்ளை ஈ, மத்திய அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு தென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வட அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்த வெள்ளை ஈ பரவியது. 2016-ம் ஆண்டு தென்னிந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூன்று வகையான வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்குவதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக களஆய்வுசெய்தபின், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா மற்றும் பயிர் பாதுகாப்புத் துறை விஞ்ஞானி பி. ஜி. கவிதா ஆகியோர் கூறியதாவது: வளர்ச்சியடைந்த பெண் வெள்ளை ஈ இரண்டு மில்லி மீட்டர் அளவு கொண்டது. வெள்ளை நிற இறகுகளைக் கொண்ட இதன் முன் இறகுகளில், கறுப்பு நிறப் புள்ளி இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியில் முட்டைகளின் பருவகாலம் 10 நாட்கள். நான்கு பருவங்களைக் கொண்ட பூச்சியின் மொத்த வாழ்நாள் 40 முதல் 50 நாட்கள்தான்.

உறியப்படும் பச்சையம்

வாயில் உள்ள ஊசி போன்ற அலகைக் கொண்டு, தென்னை மரத்தின் இலையில் உள்ள ‘குளோரோஃபில்’ என்றழைக்கப்படும் பச்சையத்தை உறிஞ்சி விடும். இதனால் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும். தென்னை இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை ஈ சுருள்சுருளாக முட்டைகளை வைப்பதால், சுருள் வெள்ளை என்றழைக்கப்படுகிறது.

விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற அட்டைகளை மரங்களில் கட்டி விடுதல், மரங்களிடையே தொங்க விடுதல் வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்கும்.

பூச்சிக் கொல்லிமருந்து மற்றும் களைக்கொல்லி மருந்துகளை தோப்பில் பயன்படுத்தாமல் இருந்தாலே நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்காமல் பாதுகாக்கலாம்.

ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட அல்லது தாக்கப்பட்ட வெள்ளை ஈக்கள் மற்றும் அதன்முட்டைகளை அட்டைகளில் சேகரித்து, ஒட்டுண்ணிகள் இல்லாத தோப்புகளில் செயற்கையாக விடலாம். இதனால் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, வெள்ளை ஈக்களைக்கட்டுப்படுத்தலாம்.

உயிர் காக்கும் ஊடுபயிர்

தென்னந்தோப்புக்குள் தட்டைப் பயிறு அல்லது கொள்ளு ஆகிய பயிர் வகைகளை ஊடுபயிராக பயிரிட்டால், பொறிவண்டு, தட்டான் ஆகியவை அதிக அளவில் வளரும். இந்த நன்மை செய்யும் பூச்சிகள், மாலை நேரங்களில் கீழே பறக்கும் வெள்ளை ஈக்களை சாப்பிட்டு விடுகின்றன. இரவு நேரங்களில் விளக்குப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம். மாலை 6 முதல் காலை 5 மணி வரை விளக்குப் பொறிகள் பயன்படுத்துவதால், வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x