Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM
ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப் பட்டுள்ள நெற்கதிரில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு வட்டாரத்தில் காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் 2108 ஹெக்டேர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டு, தற்போது கதிர் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இப்பகுதியில் பிபிடி, ஐ.ஆர் -20, கோ-50, ஏ.எஸ்.டி-16, திருச்சி-3, சம்பாசப் ஆகிய ரகங்களை அதிகமாக நடவு செய்துள்ளனர். தற்போது நிலவும் சூழ்நிலையில், இலை சுருட்டுப்புழு மற்றும் பாக்டீரியல் இலைக்கருகல் நோய், குலை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ‘ட்ரைக்கோகிரேம்மா’ முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 3 சிசி என்ற அளவில் நடவு செய்து, 40-வது நாள் முதல், 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை விடவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் செலவு குறைவதுடன் இயற்கையையும் பாதுகாத்திட முடியும். புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது ‘ குளோரிபைரிபாஸ்- 20 சதவீதம் இசி’ எனும் மருந்தினை ஏக்கருக்கு 500 மில்லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்திடலாம்.
பாக்டீரியல் இலைக் கருகல் நோய் அறிகுறிகள் தென்பட்டால், ஏக்கருக்கு 120 கிராம் ‘ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்’ மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
குலைநோயை கட்டுப்படுத்திட ‘சூடோமோனாஸ்’ கொண்டு ஈர விதை நேர்த்தி செய்யலாம். மேலும் ஏக்கருக்கு ‘ட்ரைசைக்ளோசோல்’ மருந்தினை 200 கிராம் அல்லது கிட்டாசின் 100 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம், எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT