Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

தஞ்சாவூர்/ திருவாரூர்/ காரைக்கால்

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங் காரத்தில் தாயாருடன் வெங்கடேச பெருமாள் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதேபோல, தஞ்சாவூர் மானம் புச்சாவடி வெங்கடேச பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில், கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில்களிலும் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில்..

வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3-வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.

இதேபோல, கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி, பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள், நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள், திருச்சேறை சாரநாத பெருமாள், துகிலி லட்சுமிநாராயண பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு, பெருமாளை தரிசித்தனர்.

மன்னார்குடியில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15-ம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 5.40 மணிக்கு நடைபெற்றது. அப்போது, ருக்மணி, சத்யபாமா சமேதராக வைரமுடி கிரீடம் அணிந்து சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்தார் ராஜகோபாலசுவாமி. சொர்க்க வாசலில் வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, 2 மணிநேரம் தீட்சிதர்கள் வேத பாராயணங்களை பெருமாளின் முன்பு பாடி நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சியளிக்கும் வைபவத்தை நடத்தினர்.

கரோனா ஊரடங்கால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, சொர்க்கவாசல் நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கோயில் முன்பு குழுமியிருந்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் வரிசையாக சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நேற்று காலை 5.30 மணியளவில், நித்யகல்யாணப் பெருமாள் ரத்தின அங்கியில் சொர்க்க வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு சேவைசாதித்தார். அப்போது, கோயிலின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். இதேபோல, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், காரைக்கால் கோதண்டராமர் பெருமாள், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள், திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி வழிபாடு, வீதியுலா உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x