Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM
‘சமர்த்' திட்டத்தின் கீழ், 16508 பேருக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் ‘சமர்த்' எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், நிறுவனங்கள் புதிய தொழிலாளருக்கு பயிற்சி அளித்து பணி அமர்த்திக் கொள்ளலாம். பயிற்சிக்கான செலவுகளை, நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது.
இந்த திட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க அனுமதிகேட்டு, மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் விவரங்களை அனுப்பியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சகம், திருப்பூரில் 16508 பேருக்கு ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்க அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "திருப்பூரில் 16508 பேருக்கு ‘சமர்த்' திட்டத்தின் கீழ் ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க மத்திய ஜவுளி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இப்பயிற்சியை, ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து செயல்படுத்த உள்ளன. இதற்காக, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் 75பயிற்சி மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
செக்கிங், டெய்லர், ஓவர்லாக், பிளாட்லாக் மெஷின் ஆபரேட்டர், சூயிங் மெஷின் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
புதியவர்களுக்கு மொத்தம்300 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர். இதன்மூலமாக, திருப்பூர் பின்னலாடை துறையில் திறன்மிக்க தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆடை உற்பத்தியில் தவறுகள் களையப்படும். வீண் செலவினங்கள் தவிர்க்கப்பட்டு, உற்பத்தி பெருகும். தொழில் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் துறை அதிகாரிகளுக்கு ஏற்றுமதியாளர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT