Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM

‘புரெவி' புயலால் ஏற்பட்ட கனமழைக்கு இதுவரை 211 வீடுகள் சேதம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

‘புரெவி’ புயலால் ஏற்பட்ட கன மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 211 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 39 நிவாரண முகாம்களில் 1,010 குடும்பங்களைச் சேர்ந்த 3,098 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் இதுவரை 6 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 32 இடங்களில் மரங்கள் சாய்ந்து, அவை உடனடியாக அகற்றப் பட்டுள்ளன. 168 கூரை வீடுகள் பகுதியாகவும், 6 கூரை வீடுகள் முழுமையாகவும், 37 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 211 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 இடங்களில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 24 ஆடுகள், 9 பசு மாடுகள், 1 எருமை மாடு, 1 காளை மாடு, 4 கன்றுக் குட்டிகள் இறந்துள்ளன. தண்ணீர் தேங்கியுள்ளதாக 41 புகார்களும், நிவாரண முகாம்கள் திறக்க வேண்டும் என்று 5 புகார்களும், மின் விநியோகம் தொடர்பாக 6 புகார்களும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்று, அவை சரி செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 8,714 ஹெக்டேரில் நெற்பயிர்களும், தலா 30 ஹெக்டேரில் நிலக்கடலை, சோளப்பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஒரத்தநாடு வட்டம் ஆழிவாய்க் கால்- நத்தம் சாலை, பேராவூரணி- அறந்தாங்கி சாலை, சொக்கனாவூர் சாலை ஆகியவற்றில் அதிகளவில் வெள்ளம் சென்றதால், தற் காலிகமாக போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x