Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

பெருந்துறை, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்க கொமதேக வலியுறுத்தல்

ஈரோடு

பெருந்துறை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதர அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.5.44 லட்சமும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.3.85 லட்சமும் மருத்துவப்படிப்பிற்கான கட்டணமாக மாணவர்களிடத்தில் வசூலிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக இந்த இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டணம் நிர்ணயித்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.13,670, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.11,610 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, இந்த இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் லட்சக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை தான் மாணவர்களிடத்தில் வசூலிக்க வேண்டும். மாறாக, லட்சக்கணக்கில் நிர்ணயித்திருப்பது பல்வேறு குளறுபடிகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த இரண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர், லட்சக்கணக்கான ரூபாய் கட்டணத்தை கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். எனவே மருத்துவக் கல்லூரி கட்டணக் குளறுபடிகளை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x