Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
கரோனா உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் கடலூர்மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படியும் தமிழக அரசு ஆணையின்படியும், கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாதவர்கள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வாங்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வாங்க இயலாதவர்கள், கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்.
நேரில் வர முடியாதவர்கள் 04142 212 660 என்ற தொலைபேசி மூலமும், 9976459441 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், "dlsacuddalore@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் அனுப்பி பயன்பெறலாம்.
இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டு மன்னார்கோவில், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழுவை அணுகி மனு கொடுத்து பயன்பெறலாம்.
கடலூர் மாவட்டத்தில் 56,018 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதுவரை கரோனா நிவாரண தொகையை 27,989 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT