Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM
எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியநூல், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், ஆங்கிலம் முதுகலை 3-ம் பருவத்துக்கு, எழுத்தாளர் அருந்ததிராயின் Walking withthe comrades என்ற புத்தகம், கடந்த2017-ம் ஆண்டுமுதல், பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. தற்போது, இந்த நூல் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திருநெல்வேலியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் எம்.கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ள My Native Land:Essays on Nature என்ற தலைப்பிலான கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அருந்ததிராயின் புத்தகம்நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறுகட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பும், ஆதரவுமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை: எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது.
பாடத்திட்டத்தை மாற்றம் செய்யவேண்டுமானால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பாடக்குழுவில் (Board of studies) விவாதித்து முடிவெடுத்து, அம்முடிவு கல்வி நிலைக்குழுவில் (Standing committee on academic affairs) உறுதி செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதுவே பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்ட நடைமுறை. ஆனால், எந்த சட்டபூர்வ அமைப்பிலும் விவாதிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவை, துணைவேந்தர் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், `நாட்டுக்கு எதிரான சக்திகள் குறித்த கருத்துகளை மாணவர்கள் மனதில் விதைக்கும் வகையிலான இந்த புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தது தவறு’ என்று எதிர்தரப்பில் கருத்துகள் சொல்லப்படுகின்றன.
இது தொடர்பாக, சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி கூறும்போது, ``அருந்ததிராயின் புத்தகம் கடந்த2017-ம் ஆண்டில் பல்கலைக்கழகபாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் மாவோயிஸ்டுகளை புகழும் வகையிலான கருத்துகள் இருப்பது குறித்து கடந்த வாரத்தில்தான் எனது கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, ஒரு குழு அமைக்கப்பட்டு அது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின்பேரில் அப்புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏபிவிபி அமைப்பு மட்டுமல்ல வேறுபலரும் அருந்ததிராயின் புத்தகம் குறித்து புகார்களை தெரிவித்திருந்தனர். எனவேதான், அதை நீக்கியிருக்கிறோம்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT