Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

கந்துவட்டி கொடுமையால் வீட்டை இழந்ததாக பெண் புகார்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அண்ணா நகரில் வசிப்பவர் ஆர்.கணபதியம்மாள் (65). இவர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "எனது கணவர் ரத்தினசாமி இறந்துவிட்ட நிலையில், மகள் கவிதாவுடன் திருப்பூர் கே.வி.ஆர். நகர் 2-வது வீதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தேன்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தம்பதியிடம் குடும்பச் செலவுக்காக ரூ.1.5 லட்சம்கடனாக கவிதா வாங்கினார். சில நாட்களில் அந்த பணத்துக்கு வட்டி சேர்த்து ரூ.20 லட்சம் தர வேண்டுமெனக் கூறி, அந்த தம்பதிஎங்களை மிரட்டினர்.

ஆனால், வாங்கிய பணத்துக்காக, எனது மகள் கவிதா பல லட்ச ரூபாயை வட்டியாக அளித்துள்ளார். இத்தகைய சூழலில் நாங்கள் வெளியூர் சென்ற நேரத்தில், எங்களது வீடு மற்றும் கடைக்குள் புகுந்த அந்த தம்பதி மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், திரும்பிவந்த எங்களை அடித்து விரட்டிவிட்டனர்.

எங்களது அரசு ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சொத்து பத்திரம் உள்ளிட்டவை வீட்டில் உள்ளன.

இதுதொடர்பாக கடந்த 2016 பிப்ரவரி 4-ம் தேதி மாநகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றோம். காவல் துறையினர் தடுத்து, சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதன்பிறகு கந்துவட்டி கும்பல் மிரட்டியதால், ஊரைவிட்டே சென்றுவிட்டோம். சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x