Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா திருநெல்வேலி சங்கர் நகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யன் ஆணைகளை வழங்கி பேசும்போது, “ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டுவந்தார். மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார்.
தற்போது கல்வித்துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசு அமல்படுத்தியுள்ள புதிய பாடத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியுள்ளார்” என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 98, தென்காசி மாவட்டத்தில் 108, தூத்துக்குடி மாவட்டத்தில் 75, கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன.
மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப் பேரவை உறுப்பி னர்கள் இன்பதுரை, நாராயணன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், முருகையாபாண்டியன், சண்முக நாதன், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடிக்கல் நாட்டுதல்
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்படும் போட்டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மைய கட்டிடத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.மேலும் தமிழ் மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலக பிரிவையும் அவர் திறந்து வைத்தார். மக்களவை மேலவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்கான தொகையை முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த் ஒதுக்கியிருந்தார்.
மாணவர்களுக்கு பரிசுத் தொகை
தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியருக்கு கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளில் முதலிடம் பெற்ற 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம், 2-ம் இடம்பெற்ற 6 பேருக்கு தலா ரூ.1.50 லட்சம், 3-ம் இடம் பெற்ற 18 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகைகளை மாநில பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT