Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM

நதிகள் புனரமைப்பு திட்டத்தில் தென் இந்திய அளவில் வேலூர் மாவட்டத்துக்கு முதலிடம்

வேலூர்

தென் இந்திய அளவில் நதிநீர் புனரமைப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வேலூர் மாவட்டத் துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் நீர் மேலாண்மை மற்றும் நதிநீர் புனரமைப்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் நீர்மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது.

அதேபால், நதிகள் புனரமைப்பு திட்டத்தில் தென் இந்திய அளவில் சிறந்த மாவட்டமாக வேலூருக்கு முதலிடமும், கரூர் மாவட்டத்துக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட நதிகள் புனரமைப்புப் பணிகள் குறித்த கருத் துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய திட்டத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

நாகநதி புனரமைப்பு திட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாலாற்றின் துணை ஆறுகளான சரஸ்வதி ஆறு (கொட்டாறு), மலட்டாறு, கவுன்டன்யா நதி, அகரம் ஆறு மற்றும் நாகநதி புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப் பட்டது. முதற்கட்டமாக நாகநதி புனரமைப்பு திட்டத்தில் 349 நீர் செறிவூட்டும் கிணறுகள், 210 கருங்கல் தடுப்பணைகள், ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 12,972 எண்ணிக்கையில் நீர் செறிவூட்டும் கிணறுகள், கருங் கல் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கியது. இதில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 2,667 நீர் செறிவூட்டும் கிணறுகள், 932 கருங்கல் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 2019-ம் ஆண்டில் புதிதாக 1,767 கசிவுநீர் குளங்கள், குட்டைகள், ரூ.1.37 கோடியிலும், 1,249 பண்ணை குட்டைகள் ரூ.14.55 கோடியிலும், மலைப்பாங்கான மற்றும் சாய்தள பரப்புள்ள புறம்போக்கு நிலங்களில் அகழிகள், பள்ளங்கள் அமைக்க ரூ.7.03 கோடியிலும் அமைக்கப்பட்டுள் ளன. தொடர்ந்து, ரூ.12.33 கோடியில் 22,136 நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.

தென் இந்திய அளவில் நீர் மேலாண்மை திட்டப் பணிகளை சிறப்பாக செய்து முடித்த வேலூர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள் விருதுக்கான சான்றிதழ் வழங்க உள்ளார் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x