Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியை நேற்று தொடங்கிவைத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. படம்:ஜெ.மனோகரன்.

கோவை

கரோனா சிறப்பு மருத்துவமனை யாக செயல்பட்டுவரும் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 132 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சைப் பிரிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், அமைச்சர் கூறியதாவது: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிதிலமடைந்திருந்த நிர்வாக அலுவலகம் ரூ.35 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரியின் செவிலியர் விடுதி ரூ.2 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 450 படுக்கைகள் இருந்தநிலையில், கூடுதல் கட்டிட வசதிகள் மூலம் தற்போது 215 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஐன் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதிக நுரையீரல் பாதிப்புடன் வரும் நோயாளிகளை கருத்தில் கொண்டு ரூ.52 லட்சம் மதிப்பில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஐன் சிலிண்டர் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலமாக நுரையீரல் தொற்றுடன்அதிகம் பேர் வந்தாலும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கஇயலும்.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்போதுவரை சுமார் 8,100 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 7,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்டஆட்சியர் கு.ராசாமணி, இ.எஸ்.ஐமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x