Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

காரைக்கால் மாவட்டத்தில் ரூ.7.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன மீன்பிடி கிராமம் உருவாக்கப்படும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தகவல்

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் ரூ.7.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமம் உருவாக்கப்பட உள்ளது என காரைக்காலில் நேற்று நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் 1954 நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. இதன் காரணமாக நவ.1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்ற 66-வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, சமாதானப் புறாக்களை பறக்கவிட்ட அவர் பேசியதாவது:

வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், பண்ணைக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.1.4 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முட்டை, கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க கோட்டுச்சேரியில் உள்ள கோழிப்பண்ணையைப் புதுப்பிக்கும் பணி நடப்பாண்டில் மேற் கொள்ளப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இந்த மாதம்(நவம்பர்) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மத்திய அரசின் பிரதமரின் மட்சிய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் 100 சதவீத நிதியுதவியுடன், காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு மீனவக் கிராமம் ரூ.7.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமமாக உருவாக்கப்பட உள்ளது.

காரைக்கால் நகராட்சியில் உள் ளாட்சி அமைப்பு சார்பில் அமிழ்தம் என்ற நடமாடும் உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி காரைக்கால் துறைமுகம்- இலங்கை வடக்கு பகுதியிலுள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் படகு போக்கு வரத்துக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டிலேயே பணிகளை விரைந்து முடித்து, படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முது நிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. நிகழ்ச்சியில், பொதுமக்களும் அதிக அளவில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x