Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ரூ.45 கோடியில் 25 காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்கள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ரூ.45 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சுற்றுப்புற காற்றுத்தன்மையை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 5 இடங்களிலும் கும்மிடிப்பூண்டி, கோவை, பெருந்துறை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு தொடர் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் கடந்த 2015-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்தார்.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி,திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப்பட்டினம்,அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர்மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 25 இடங்களில் ரூ.45 கோடி மதிப்பில் சுற்றுப்புற காற்றுத்தர கண்காணிப்புநிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையங்களில் காற்றில் கலந்துள்ள மாசு காரணிகள் 10 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள், 2.5 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள நுண்துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, அமோனியா, ஓசோன்,கார்பன் மோனாக்சைடு மற்றும்பென்சின், டெலுவின், ஜைலின்ஆகியவற்றின் அளவுகள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, இப்புள்ளிவிவரங்கள் மின்னணு பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

இதன்மூலம் காற்றுத்தன்மை குறியீடு கணக்கிடப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இந்நிலையங்களில் இருந்து பெறப்படும் புள்ளிவிவரங்கள் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அந்தந்த மவட்டங்களின் அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

அத்துடன், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, நகரங்களுக்கு காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும் திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்தவும் புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கும் இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.கருப்பணன், தலைமைச் செயலர் க.சண்முகம், வனத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x