Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து 4 வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளின் துறை செயலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அனுப்பிய கடிதத்தில், “மாமல்லபுரத்தை யுனெஸ்கோகலாச்சார சின்னமாக அங்கீகரித்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிஅதன் தொன்மையை நிரந்தரமாகப் பாதுகாக்க மத்திய, மாநிலஅரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, மாமல்லபுரம் பகுதியைப் பாதுகாப்பது, பராமரிப்பது, அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அத்துடன் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியிலிருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அந்த பகுதியை மேம்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்துள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், “நாடு முழுவதும் உள்ள 16சுற்றுலாத் தலங்களில் 14-வதுஇடத்தில் மாமல்லபுரம் இடம்பெற்றுள்ளது. அதன் மேம்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 400 பக்க அறிக்கை தயாராக உள்ளது. கரோனா பேரிடர் காலமாக இருப்பதால் நிதி ஒதுக்குவது குறித்து தகவல் எதுவும் வரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு தரப்பில், மத்தியஅரசு நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மாமல்லபுரம் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதற்கு கரோனா பேரிடரை காரணமாகக் கூற முடியாது. நிதி ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க இறுதிஅவகாசமாக 4 வார காலம் வழங்கப்படுகிறது. இந்த முடிவெடுக்காவிட்டால், மத்திய, மாநில அரசுத் துறை செயலாளர்கள் நேரில்ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்றுவிசாரணையை வரும் நவ. 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT