Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கான்கிரீட் மழைநீர் வடிகால் அமைப்பதால், அங்குள்ள இயற்கை நீர் தாங்கிகளுக்கு (Aquifer) பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பனையூரைச் சேர்ந்த சாஜித் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில், கோவளம் வடிநிலப் பகுதியில் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ.1243கோடியில் 360 கிமீ நீளத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதில் 3-வது திட்டப் பகுதி இடம்பெற்றுள்ள இசிஆர் பகுதி மணற்பாங்கானது. இங்கு எவ்வளவு மழை பெய்தாலும், மழைநீர் பூமிக்குள் உறிஞ்சப்பட்டுவிடும். கடந்த 2015-ம் ஆண்டு கூட இப்பகுதியில் வெள்ளம் ஏற்படவில்லை. கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான மணற்பாங்கான பகுதியை, மழைநீரை உறிஞ்சும் நீர்த்தாங்கி மண்டலமாக அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் மாநகராட்சி, அத்திட்டம் குறித்துஅப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் அதே பகுதியில் நிலத்தடிக்கு செல்லாமல், கடலுக்கு கொண்டு செல்லப்படும். இதனால்அப்பகுதியில் அமைந்துள்ள இயற்கையாக நீர் தாங்கிகள் பாதிப்புக்குள்ளாகும். மாநகராட்சி செயல்படுத்தும் இத்திட்டம், தன்னிச்சையான, அறிவியல்பூர்மல்லாதது. எனவே இசிஆரில் பனையூர் பகுதியில் மேற்கொள்ளும் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சாந்தன் ஆஜரானார். விசாரணைக்கு பின் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், சென்னை மண்டல மூத்தஅதிகாரி, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமூத்த அதிகாரி, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார பிரிவின் கண்காணிப்பு பொறியாளர், சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன மூத்த விஞ்ஞானி ஆகிய 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு தொடர்புடைய திட்டப்பகுதியில் ஆய்வு செய்து, இத்திட்டத்துக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமா, இத்திட்டத்தால் நீர் தாங்கிகளுக்கு ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா, மக்களுக்கும், மழைநீரை உறிஞ்சி இயற்கையாக தேக்கிவைத்துக்கொள்ளும் நீர்த்தாங்கிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று திட்டங்கள் ஏதேனும் செயல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து, மனு மீதானஅடுத்த விசாரணை நாளான டிசம்பர் 4-ம் தேதிக்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT