Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
கோயில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக 12 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நேருவில் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (41), வெளிநாடு வாழ் இந்தியர். இவரை தொடர்பு கொண்ட, உறவினரான லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் நாகசுந்தரி (எ) நான்சி தம்பதி, தமிழகத்தின் மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி கிராமத்தில் 73 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ராஜேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நிலத்தை வாங்க ரூ.1.60 கோடி பணத்தை ஆரோக்கியராஜ்-நான்சி தம்பதி உள்ளிட்ட 12 பேரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன், நிலம் தொடர்பாக விசாரித்ததில், அவர்கள் மகாபலிபுரம் நெம்மேலி கிராமத்தில் உள்ள ஆளவந்தார் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலியாக பத்திரம் தயாரித்து, மோசடியாக தன்னிடம் விற்பதற்காக ரூ.1.60 கோடி பணம் வாங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாரிடம் ராஜேந்திரன் அண்மையில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆரோக்கியராஜ், அவரது மனைவி நான்சி, உமையம்மாள், கடலூர் மாவட்டம் எய்தனூர் சீதாராமன், அவருடைய மனைவி அமுதா, மகள்கள் சத்யா, அகிலா, காயத்ரி, மருமகன்கள் அபிலேஷ், கணேஷ், உறவினர் குமார், சாமி ஆகிய 12 பேர் மீது நேற்று முன்தினம் மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT