Published : 02 Sep 2023 08:00 AM
Last Updated : 02 Sep 2023 08:00 AM
உடுமலை: உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு, எரிபொருள், மருந்து,அழகுசாதனப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என மனிதர்களுக்கு பல விதங்களில் பயன்படுவதால், ‘வாழ்க்கைக்கான மரம்’என்றும், நாடுமுழுவதும் பல மில்லியன் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூக பொருளாதார செழிப்பில் பெரும் பங்காற்றுவதால் ‘கல்பவிருட்சம்’ என்றும் தென்னை மரம்புகழப்படுகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய தென்னையை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ம் தேதி (இன்று) உலக தென்னை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து, உடுமலை அடுத்த திருமூர்த்தி நகரில் செயல்பட்டு வரும் தென்னை ஆராய்ச்சி மையமேலாளர் கு.ரகோத்தமன் கூறிய தாவது: உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை உற்பத்தி நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு உலக தென்னை தினத்தின்கருப்பொருள் ‘தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைக்கான தென்னை துறையை நிலைநிறுத்துதல்’ என்பதாகும். இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராபோன்ற மாநிலங்கள் முன்னணிபங்களிப்பாளர்களாக உள்ளன. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பல நாடுகளில், இந்நாளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாநாடு, பட்டறைகள், தொழில்நுட்ப அமர்வுகள், கண்காட்சிகள், கண்காட்சி, விநாடி வினா நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் ஆரோக்கிய அமர்வுகள் போன்ற நிகழ்வுகளுடன் உலக தென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது.
திருமூர்த்தி நகர் தென்னை ஆராய்ச்சி மையத்தில், தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5.86 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையில் வழங்கப்பட்டுள்ளன.
4,100 தென்னங்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உலகதென்னை தினத்தையொட்டி, இன்று திருமூர்த்திநகர் தென்னைஆராய்ச்சி மையத்தில் சிறப்புகருத்தரங்கம், பயிற்சிமுகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT