Published : 16 Nov 2022 04:15 AM
Last Updated : 16 Nov 2022 04:15 AM

விருதுநகரில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் - புத்தகத் திருவிழா நாளை தொடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

விருதுநகர்

விருதுநகரில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் அரசு சார்பில் நடைபெறும் முதலாவது புத்தகத் திருவிழா நாளை (நவ.17) தொடங்குகிறது. அமைச்சர்கள் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். நவ.27-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் மாலையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தி லுள்ள பொருட்காட்சி மைதானத்தில் இந்த விழாவை நடத்துகின்றன.

தொடக்க விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

நவ. 27 வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்விழா நடைபெறும். நவ.18 முதல் 27-ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு போட்டிகளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நாட்டுப்புற கலை நிகழச்சிகளும் நடைபெறும்.

மாலையில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் இலக்கிய அரங்கு நிகழ்ச்சி நடைபெறும். 18-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் எழுதிய அழகாக ஆரம்பிக்கலாங்களா? என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும், எழுத்தறிவித்தவர்கள் என்ற தலைப்பில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனின் கருத்துரையும், நினைவின் சித்திரங்கள் என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணனின் கருத்துரையும் அரங்கேறும்.

நவ.19-ல் இலக்கியமும், வரலாறும் என்ற தலைப்பில் மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கருத்துரையும், வாழ்வுக்கு துணை நிற்பது - உறவே நட்பே, என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம், 20-ம் தேதி புத்தகங்களின் நோக்கம் அன்பை வளர்ப்பதா? அறிவை பெருக்குவதா? என்ற தலைப்பில் சிவகாசி ராமசந்திரன் மற்றும் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம், 21-ம் தேதி திரைக்கலைஞர்கள் எங்கே போகிறோம் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனியின் கருத்துரையும், இலக்கியம் - ஒரு மானுட துளிர்ப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் கதை சொல்லி பவா செல்லத்துரையின் கருத்துரையும், நிற்க அதற்குத் தக என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் மோகனசுந்தரத்தின் கருத்துரையும் நடைபெறும்.

22-ம் தேதி பழைய கடல், புதிய அலை எனும் தலைப்பில் ஈரோடு மகேஷின் கருத்துரையும், செல்வம் சிலருக்குண்டு என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கருத்துரையும், 23-ம் தேதி வாழ்க்கை என்பது யாதெனில் என்ற தலைப்பில் சின்னத்திரை புகழ் கோபிநாத்தின் கருத்துரையும், கலையும், இலக்கியமும் என்ற தலைப்பில் கவிஞர் கவிதா ஜவஹரின் கருத்துரையும், 24-ம் தேதிதமிழின் உரம் - அறம் என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட நடிகர் ஜொ.மல்லூரியின் கருத்துரையும், யாரைத்தான் நம்புவதோ? என்ற தலைப்பில் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்கும் கருத் துரை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மேலும், 25-ம் தேதி இலக்கியமே வாழ்க்கை என்ற தலைப்பில் கு.ஞானசம்பந்தனின் கருத்தரங்கம், கைப்பொருள் தன்னில் - மெய்பொருள் கல்வி என்ற தலைப்பில் விருதுநகர் கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன் பங்கேற்கும் கருத்தரங்கம், 26-ம் தேதி கற்பதால் என்ன பயன்? என்ற தலைப்பில் சுகி சிவம் பங்கேற்கும் கருத்தரங்கம், எதை படிப்பது? எப்படி படிப்பது? என்ற தலைப்பில், தமிழக அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்கும் கருத்தரங்கமும், 27-ம் தேதி வானம் உங்கள் கையில் என்ற தலைப்பில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பங்கேற்கும் கருத் தரங்கும் நடைபெறுகின்றன.

அதோடு, வெம்பக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணி கள் குறித்த கண்காட்சி அரங்கும் அமைக் கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x