Published : 21 Mar 2022 06:09 AM
Last Updated : 21 Mar 2022 06:09 AM

பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: இந்து முன்னணி மண்டல பொதுக்குழுவில் தீர்மானம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்து முன்னணி மண்டல பொதுக் குழுக் கூட்டத்தில் பேசும் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்.

திருவண்ணாமலை

பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என திருவண்ணா மலையில் நடைபெற்ற இந்து முன்னணி மண்டல பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இந்து முன்னணியின் வேலூர் மண்டல பொதுக்குழு கூட்டம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது. வேலூர் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் பக்தன், மாநில செயலாளர் மணலி மனோகர், புதுச்சேரி மாநிலத் தலைவர் சுனில் குமார், கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பி.முருகானந்தம் சிறப் புரையாற்றினார்.

கூட்டத்தில், “இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாமல் மாவட்டதிருக்கோயில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரத்தில் புனிதவளனார் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள மாணவர் களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், “ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கொங்கனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி குட முழுக்கு விழா நடத்த வேண்டும்.கோயில் சொத்துக்களை ஆண்டு வாடகைக்கு விடும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழமையான வீரபத்திரர் சுவாமி கோயிலுக்கு இடையூறு இல்லாமல், கோயி லுக்கு சொந்தமான 22 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்துக்கு வீரபத்ரர் பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். கேவி குப்பம் அடுத்த லத்தேரி பாறைமேடு கிராமத்தில் உள்ள பழமையான இருபச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பத்தை அகற்ற மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக் கும் மாணவர்களிடம் பைபிள் கொடுத்து மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில், திருவண்ணாமலை மாவட்ட பொதுச்செயலாளர் இரா. அருண்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x