Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஆவினில் ரூ.130 கோடியில் நெய் கொள்முதல் : பால்வளத் துறை அமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் இடம்பெறும் நெய், ஆவின் நிறுவனத்தில் ரூ.130 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் பால் உற்பத்தி, பால் பொருட்கள், பால் விற்பனை செயல்பாடுகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வு, மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானுரெட்டி, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

பால் குளிரூட்டும் பிரிவு, வெண்ணெய், நெய் உற்பத்தி பிரிவு, பால் பதப்படுத்தும் பிரிவு, பால் பவுடர் வைப்பு அறை மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணியாளர்களிடம் கலந்துரை யாடிய அமைச்சர் ஆவின் பால கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பால் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார்.

மேலும், ஆவின் பாலகத்தில் அமைச்சர் பணம் செலுத்தி ரசீது பெற்று தேநீர்அருந்தினார்.

இதைத் தொடர்ந்து, துணைப் பதிவாளர்கள், மார்க்கெட்டிங் பிரிவு, கொள்முதல் மற்றும் பால் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் இதர தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆவின் நிறுவனம் லாபகரமாக இயங்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறியது:

தமிழக பால் வளத்துறையை நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக இயக்க தமிழக முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில், மாநில அளவில் நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. அதேபோல, நாளொன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 27 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த 15 நாட்களில் கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வது எனவும், நாளொன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்வது எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாக்கெட் பால் விலை தமிழக முதல்வரால் லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணகிரி ஒன்றியத்தின் பால் விற்பனை 19 ஆயிரத்து 500 லிட்டரில் இருந்து 22 ஆயிரத்து 600 லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றியத்தின் வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூ.42 லட்சம் அதிகரித்துள்ளது.

2021 தீபாவளிக்கு முன்பாக, அனைத்து அரசு அலுவலகங்களும் ஆவின் நிறுவனத்தில் இருந்து இனிப்பு வகைகள் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 18 நாட்களில் ரூ.85 கோடிக்கு விற்பனை நடந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தீபாவளியின்போது ரூ.53 கோடிக்கு விற்பனை ஆகி இருந்தது. வரவிருக்கும் பொங்கல் விழாவுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் வழங் கப்பட உள்ளது. இவற்றில் ஒன்றான நெய், ஆவின் நிறுவனத்திடம் ரூ.130 கோடிக்கு கொள்முதல் செய்யப் பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மணிமேகலை, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், ஆவின் பொது மேலாளர் வசந்தகுமார், ஆவின் தலைவர் குப்புசாமி, துணை பதிவாளர்கள் நாகராஜ், கோபி, விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x