Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் - சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான மருந்துகள் குறித்த கருத்துக் காட்சியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

மாவட்டத்தின் மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு, பயிர் சாகுபடி நிலைகள், வேளாண்மை திட்டங்கள் குறித்து இணை இயக்குநர் முகைதீன் எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘‘மாவட்டத்தில் ராபி பருவத்தில் தேவையான மழை 250 மி.மீ., தான். ஆனால் இந்த ஆண்டு 800 முதல் 900 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் .

இதற்கு பதிலளித்த ஆட்சியர் செந்தில் ராஜ், மழை, வெள்ளச் சேதம் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிமுடிந்ததும் அரசுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சூரியகாந்தி விதை

தொடர்ந்து பேசிய கிருஷ்ணமூர்த்தி, ‘‘மாவட்டத்தில் இந்த ஆண்டு சூரியகாந்தி விதை எங்கேயும் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் கிடைக்க வேளாண்மைத் துறைஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் சூரியகாந்தி பயிரிடவில்லை’’ என்றார்.

இதற்கு பதிலளித்த வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், ‘‘கடந்த ஆண்டு பெய்தமழை காரணமாக விதை பண்ணைகள் சேதமடைந்து விதைகள் உற்பத்தி செய்ய முடியவில்லை’’. மேலும், பிற மாவட்டங்களிலும் சூரியகாந்தி விதை கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டு விதை உற்பத்தி குறைந்துள்ளது. விவசாயிகள் ஒட்டுரக விதைகளையே விரும்புவதால் அந்த விதை கிடைக்கவில்லை’’ என விளக்க மளித்தார்.

அப்போது ஆட்சியர் குறுக்கிட்டு, அடுத்த ஆண்டாவது தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விதைஉற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தராசு மகாராஜன் பேசும்போது, ‘‘ பல உரக்கடைகளில் விலைப்பட்டியல், இருப்பு விவரம் முழுமையாகவைக்கவில்லை’’ என புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வேளாண்மைத்துறை அதிகாரி, விதிமுறைகளை பின்பற்றாத 5 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

‘‘5 கடைகளையும் சீல்வைத்து, அதுபற்றிய விவரத்தை பத்திரிகைகளில் வெளியிடுங்கள். அப்போது தான் அடுத்த கடைக்காரர்கள் விதிகளை முழுமையாக பின்பற்றுவார்கள்’’ என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கலப்பட கருப்பட்டி

உடன்குடி பகுதியை சேர்ந்தசந்திரசேகர் பேசும்போது, ‘‘உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலப்பட கருப்பட்டி தயாரிப்பை முற்றிலும் நிறுத்த வேண்டும்’’ என்றார்.

இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட ஆட்சியர், இது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும் அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மகா பால்துரை பேசும்போது, ‘‘மணிமுத்தாறு 3-வது ரீச்கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள குளங்கள் ஆண்டுதோறும் நிரம்பும். கருமேனி ஆற்றில் சாத்தான்குளம் பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

கூட்டுறவு சங்கத்தில் மோசடி

குரும்பூரை சேர்ந்த தமிழ்மணி பேசும்போது, ‘‘குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெரிய அளவில் மோசடிநடந்துள்ளது. இதில் தலைவர்மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. ஏராளமானவிவசாயிகளின் நகைகள் இந்த கடன் சங்கத்தில் உள்ளது. எனவே, விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். கடம்பா குளத்தில் உடைப்பு ஏற்பட்டு விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

ஓடை ஆக்கிரமிப்பு

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி பேசும்போது, ‘‘2020- 2021-ம் ஆண்டுவிளாத்திகுளம், வேம்பார் பிர்காவில் வெங்காயம் சாகுபடி செய்தவிவசாயிகளுக்கு முறையாக கணக்கீடு நடத்தாததால் இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே.முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x