Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு குடியரசு தினத்தன்று முதல்வரின் கையெழுத்துடன் கூடிய நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் குழுவினர், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைந்து வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாபெரும் திட்டம் நேற்று மாலை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை), அமர் குஷ்வாஹா (திருப் பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித் தனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறும்படத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 93 லட்சம் பேர் தவணைக்காலம் முடிந்தும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போடாமல் உள்ளனர். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் தடுப்பூசியை வீணடிக்காமல் செலுத்தியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 743 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த தன்னார்வலர்கள் குழுவினர் கிராமங்கள் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 4, ராணிப் பேட்டை மாவட்டத்தில் 1 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை. 100 சதவீதம் இலக்கை எட்டிய ஊராட்சி தலைவருக்கு முதல்வரின் கையெழுத் திட்ட நற்சான்றிதழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்’’ என்றனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி பணிகளில் சரியான விழிப் புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும். இலக்கை அடையாத கிராம ஊராட்சி தலைவர்களுக்கு கட்டாயம் விடுப்பு வழங்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT