Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அண்டை மாநிலங்களான தெலங்கானாவில் ரூ.3,016, ஆந்திராவில் ரூ.3,000, புதுச்சேரியில் ரூ.3,800 வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களில் கூடுதல் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, கடந்த 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3,000, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000 வழங்கக் கோரி 120 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, திருக்கழுக்குன்றத்தில் துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை செங்கல்பட்டு காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT