Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு : நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிதம்பரம் தச்சன் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரிகள்,போலீஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற நகராட்சி அதிகாரி களுக்கும் பொதுமக் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூரை வீடுகள், மாடி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். தச்சன் குளத்தை சேர்ந்த மக்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசித்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அறிவித்தது.

தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தச்சன் குளம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆதரவாக, அவர்களுடன் இணைந்து ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியேரை சந்தித்து மாற்று இடம் கேட்டும், கால அவகாசம் கேட்டும் மனு அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் நகராட்சி நகர நல அமைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, மின் கண்காணிப்பாளர் சலீம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம், தச்சன் குளம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள் திரண்டு சென்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம், வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்கள், “நாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம், நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் வயதானவர்களும், குழந்தைகளும் உள்ளனர். எங்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும்.மழையால் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், “அரசு உத்தரவுப்படி தான் நாங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை செய்து வருகிறோம். 10 நாட்கள் அவகாசம் தருகிறோம். நீங்களாகவே அகற்ற வேண்டும்” என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி பாதியிலேயே நின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x