Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால், பாளேகுளி கால்வாய் நீட்டிப்பு திட்டம் தொடங்கிய 8 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தூர் வரையுள்ள 28 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும், அப்பகுதியில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக்கால்வாய் மூலம் திறக்கப்படும் உபரிநீர் கடைமடை ஏரியான பாளேகுளிக்கு வருகிறது. இந்த ஏரியில் இருந்து கால்வாய் நீட்டிப்பு செய்து சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி வரையுள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாளேகுளி கால்வாய் நீட்டிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்ட பணிகள் 2013-ம் ஆண்டு நிறைவடைந்தது.
புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர் மழை மற்றும் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து பாளேகுளி ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் நீட்டிப்பு செய்யப்பட்ட 28 ஏரிகளுக்கு திறக்கப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் சூழற்சி முறையில் தண்ணீர் ஏரிகளுக்கு விடப்படுவதும் வழக்கம். இதில், அதிகப்பட்சம் 20 ஏரிகள் வரை நிரம்பும். இதனால், மற்ற ஏரிகளிலும் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையாலும், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதாலும் தற்போது, 28 ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வரை பயன்பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு கூறியதாவது:
பாளேகுளி கால்வாய் நீட்டிப்பு திட்டம் 2013-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது முதல் ஏரிகளுக்கு 9 முறை தண்ணீர் விடப்பட்டுள்ளன. ஒருமுறை கூட 28 ஏரிகள் நிரம்பியது கிடையாது. இதுதொடர்பாக பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகனிடம் கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து, அவரது தொடர் முயற்சியால் நீர்வழிப்பாதை கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. இதனால், தற்போது தண்ணீர் தடையின்றி ஏரிகளுக்கு செல்கிறது.
மேலும், தொடர்ந்து பெய்த மழையாலும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கால்வாய் நீட்டிப்பு திட்டம் செயல்பட தொடங்கிய கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக 28 ஏரிகளும் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
மேலும், கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். எனவே தொடர்புடைய அலுவலர்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment