Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
ராமநாதபுரம் அருகே தென்மாவட்ட அளவிலான வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் 13 காளைகளும், நூறுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் 13 வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் பங்கேற்றன.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள், களத்தில் நின்று காளைகளை அடக்கினர். ஏழு மாடுகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். ஆறு மாடுகள் பிடிபடாமல் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடி ஆதித்தன், காஞ்சிரங்குடி முனியாமி, கடலாடி புனவாசலைச் சேர்ந்த மாயக்கிழவன், திருச்சியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் சபரி மணிகண்டன், சிவகங்கை பருத்திக் கண்மாயைச் சேர்ந்த ஜவஹர் ராயன் ஆகியோருடைய 6 காளைகளுக்கு தலா ரூ.7,500 பரிசு வழங்கப்பட்டது.
ஆறு காளைகளில் சிறந்ததாக 4 காளைகள் தேர்வு செய்யப்பட்டு கூடுதல் சிறப்பு பரிசாக தலா ஒரு சைக்கிள் வழங்கப்பட்டது. பிடிபட்ட 7 காளைகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 2,500 மற்றும் கயிறு கட்டிலும் வழங்கப்பட்டது.
திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு பேரவைத் தலைவருமான ஆதித்தன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT