Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

ஓசூர் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை : திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்

ஓசூர்

ஓசூர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஓசூரில் இந்து கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு பணியின்போது ஓசூர் அருகே பாகலூர் அடுத் துள்ள கூலிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் சாலை அமைத்து கல்குவாரிக்குச் செல்ல லாரிகள் சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்ததால், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தி யாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 5-வது முறையாக ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கூலிகானப்பள்ளி கோயில் இடத்தை பார்வையிட்ட போது கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக பாதை அமைத்துள்ளார்கள் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் வேலி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய ஆய்வில் குறிப்பிட்ட அந்த இடத்தின் வழியாக அத்துமீறி வந்த 2 லாரிகள் கைப்பற்றப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மிக மிக விலை உயர்ந்த மதிப்புள்ள இடங்கள் ஓசூர் பகுதியில் தான் உள்ளது. இங்குள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களை முறையாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x