Published : 11 Dec 2021 03:13 AM
Last Updated : 11 Dec 2021 03:13 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - தூத்துக்குடியில் வாகனங்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் போராட்டம் :

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி/கோவில்பட்டி

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சிஐடியூ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் சாலைகளில் 10 நிமிடம் வாகன நிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ மாநில செயலாளர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில், வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி- பாளையங் கோட்டை சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பிரையண்ட் நகர், கோரம்பள்ளம், பூபால்ராயர்புரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள சிஐடியூ தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.

சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் பேசினர் புதுமண தம்பதிகள் கிழவிபட்டியைச் சேர்ந்த சுரேஷ், மகாலட்சுமி என்ற மஞ்சு, மாதர் சங்க மாவட்டத் தலைவி விஜயலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபோல, கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாவட்டச் செயலர் வயனபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலர் சாலமோன், விவசாயிகள் சங்க கயத்தாறு ஒன்றிய செயலர் சீனிப்பாண்டியன் கலந்து கொண்டனர்.

எட்டயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலர் கருப்பசாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், தாலுகா செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதூரில் சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜோதி, தாலுகா குழு உறுப்பினர் ஆண்டி, விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் நடராஜன், கிளை செயலர் முருகேசன், ஆட்டோ சங்க தலைவர் கண்ணன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x