Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM

ஏலச்சீட்டு நடத்தி ரூ.11.77 லட்சம் மோசடி - உறவினர்கள் மீது மூதாட்டி புகார் :

திருவள்ளூர்

சோழவரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.11.77 லட்சம் மோசடி செய்ததாக உறவினர்கள் மீது 72 வயது மூதாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நாகபூஷ்ணம்(72). இவர், தன் உறவினர் ஏலச்சீட்டு நடத்தி, தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக நேற்று திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் நாகபூஷ்ணம் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் கிராமம் அருகே உள்ள வாணியன்சத்திரம் - கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் என் சகோதரர் மகளான லலிதாவும், அவரது கணவரான பாபுவும் கடந்த 2019-ம் ஆண்டு என்னை அணுகி, அவர்கள் நடத்தும் ஏலச்சீட்டில் சேரும்படி வற்புறுத்தினர்.

அதன் விளைவாக, 4 ஏலச்சீட்டுகளில் சேர்ந்து, மாதந்தோறும் தொகை செலுத்தி வந்தேன். அந்த ஏலச்சீட்டுகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், ஏலச்சீட்டுகளின் மொத்த தொகையான 7 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் என்னிடம் அவ்வப்போது கடனாக பெற்ற 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என, 11 லட்சத்து 76 ஆயிரத்து 600 ரூபாயை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் எனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு லலிதா, பாபு ஆகியோரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், `இனி பணம் கேட்டு வந்தால் உன்னை அடித்துக் கொன்றுவிடுவோம்’ எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

நாகபூஷ்ணத்தின் புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி, அலுவலக உயரதிகாரி ஒருவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக நாகபூஷ்ணம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x