Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM
தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்/ திருச்சி
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை வழி அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று பயணிகள் குளிரூட்டப்பட்ட கட்டண அறை, இருப்புப்பாதை காவலர்கள் ஓய்வறை ஆகியவற்றை திறந்துவைத்து, பல்வேறு கட்டமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு ரயில் வசதிகள் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் ஜான்தாமஸ் கூறியது:
திருவாரூர்-காரைக்குடி இடையே ஜனவரி மாத இறுதியில் வழக்கம்போல, பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை.
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை வழி அகலப்பாதை வேண்டுமென்றால் 70 சதவீதம் சரக்கு ரயில் போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து இல்லாததால், இந்த திட்டத்துக்கு தற்போது வாய்ப்பில்லை என்றார்.
கும்பகோணத்தில்...
இதேபோல, கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினர், பாபநாசம் வர்த்தகர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம், திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.பின்னர், ரயில் பயணிகள் சார்பில் அவரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘நீடாமங்கலம்-கும்பகோணம்-விருத்தாசலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். கும்பகோணத்தில் விரைவில் விவேகானந்தர் நினைவு அருங்காட்சியகம் திறக்க வேண்டும். கும்பகோணத்தில் ரயில் பயணிகள் தங்கும் விடுதி அமைக்க வேண் டும்.
பட்டுக்கோட்டை ரயில் பாதையில் சென்னைக்கு தினசரி இரவுநேர ரயில் இயக்கவும், பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர், செந்தூர் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறையில்...
தொடர்ந்து, மயிலாடுதுறை சந்திப்பில் ஆய்வு நடத்திய ஜான்தாமஸ், காரைக்கால்- பேரளம் ரயில்பாதை அமைக்கும் பணிகள் 2023-ம் ஆண்டு நிறைவுபெறும். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி வழித்தட பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும். மயிலாடுதுறை ஜங்ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருச்சியில்...
இதேபோல, திருச்சி ஜங்ஷனில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று ஐஆர்சிடிசி மையம், இ-பைக் வாடகை வசதி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். ஐஆர்சிடிசி உணவு மையம் அமைக்கப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டார்.தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்லும் பணியை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக தஞ்சாவூர்-பொன்மலை இடையே விரைவு ரயிலை இயக்கி வேக சோதனையும் அவர் மேற்கொண்டார்.
ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பிரேந்திர குமார், அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT