Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு போஸ்டர்களை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்டார்.
அதன் பின்னர் ஆட்சியர் கூறும்போது, "ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 01.01.2019 முதல் தமிழக அரசுதடை செய்துள்ளது. அதனடிப்படையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், கப்கள், டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், தோரணங்கள், கொடிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி வரை ஒரு வாரம் தொடர் விழிப்புணர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாவட்டநிலையான அலுவலர்கள் மற்றும்பிற சங்கத்தின் நிர்வாகிகளிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியபோஸ்டர்கள், பதாகைகள், ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்க்கும் வகையில்காட்சிப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்துக்குஅனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், சுற்றுச் சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT