Published : 09 Dec 2021 03:09 AM
Last Updated : 09 Dec 2021 03:09 AM

முதுகுளத்தூரில் போலீஸார் விசாரணைக்கு பிறகு மரணமடைந்த - மாணவர் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊரில் அடக்கம் :

மணிகண்டன் இறப்புக்கு உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி மொபைல் போன் விளக்குகளை ஒளிரவிட்டவாறு இரவிலும் போராட்டம் நடத்தி வரும் கமுதி தேவர் கல்லூரி மாணவர்கள்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவரின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணக்குமாரின் மகன் மணிகண்டன்(21). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ம் தேதி மாலை இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தியும் நிற்காமல் சென்றதால் விரட்டி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது தாயாரை வரவழைத்து விடுவித்தனர். இந்நிலையில், அன்றிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மறுநாள் காலை அவர் உயிரிழந்தார்.

அதனையடுத்து 5-ம் தேதி மாலை மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸார் தாக்கியதால்தான் மணிகண்டன் இறந்தார் எனக் கூறி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து மணிகண்டனின் தாயார் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மணிகண்டனின் உடலை மறுகூறாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், வருவாய்த் துறை, காவல் துறையினர் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தினேஷ், அழகுமலை, அசோக்ராஜா, ராஜகுரு, ஆறுமுகம் ஆகியோர், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவர்களுடன் இறந்த மணிகண்டன் தரப்பில் உறவினர் ஒருவராக கடலா டியைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமார், பாஜகவைச் சேர்ந்த மதுரை மருத்துவர் சரவணன் ஆகியோரை, உடற்கூறாய்வின்போது உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால் அதிகாரிகள் இதை ஏற்கவில்லை.இதனால் நேற்று பிற்பகல் வரை மறு உடற்கூறாய்வு நடக்கவில்லை. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆட்சியர் அனுமதியின்படி மதுரை மருத்துவர் சரவணனை உடற்கூறாய்வின்போது அனுமதித்தனர். அதனையடுத்து மணிகண்டனின் உடல் மறு கூறாய்வு நடந்தது. அதன்பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, வாங்க மறுத்து ஒரு மணி நேரத்துக்கும்0 மேலாக போராட்டம் நடத்தினர். போலீஸார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து உடலை பெற்று சென்று நீர்கோழியேந்தல் கிராமத்தில் அடக்கம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x