Published : 09 Dec 2021 03:10 AM
Last Updated : 09 Dec 2021 03:10 AM
சூளகிரி அருகே 300 ஆண்டு பழமைவாய்ந்த எல்லைகளை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளியில் யோகராஜின் நிலத்தை சீர் செய்யும் போது 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல் கிடைத்தது. இதனையறிந்த கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் வைணவ கோயில்களுக்கு (பெருமாள் கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல்லும், சமணகோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும், சைவக்கோயில்களான சிவன், காளி உள்ளிட்ட கோயில் நிலங்களில், திரிசூலக்குறியுடைய கற்களும் நடப்பட்டிருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் சூலம் மற்றும் கல்வெட்டுடன் நடப்பட்டுள்ள எல்லைக்கல் இதுவாகும்.
இவை 300 ஆண்டு பழமை வாய்ந்தது. நிலம் அளக்கப்பெற்று, நிலத்திற்கான எல்லைகளை குறிக்க எல்லைக்கற்கள் நடப்பட்டதை இந்த கல்வெட்டு நமக்கு கூறுகின்றது. இதற்கு 2 கிலோ மீட்டர் அருகே மற்றொரு சூலக்கல்வெட்டு காணப்படுகிறது. அது மற்றொரு எல்லையாக இருக்கக் கூடும். மேலும் இன்னும் 2 சூலக்கற்களும் ஒரு கல்வெட்டும் அருகே உள்ள நிலங்களில் இருக்கக்கூடும். அவை கிடைத்தால் மேலும் விவரங்கள் தெரியவரும். இங்குள்ள நிலத்தில் சிறு தரைகோட்டையும், கண்காணிப்பு கோபுரமும், அழிந்த நிலையில் காணப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT