Published : 09 Dec 2021 03:11 AM
Last Updated : 09 Dec 2021 03:11 AM

தூத்துக்குடியில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல் :

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ராணுவ தளவாட உற்பத்திமையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் 5 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கி பேசியதாவது:

தூத்துக்குடி நகரம் சிறிய நகராட்சியாக இருந்து இன்று பெரிய மாநகராட்சியாக உயர்ந்திருப்பதற்கு காரணம் தொழில்முனைவோர்கள் தான். பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் புரிய தொழில் முனைவோர்கள் இங்கு வருவதற்கு தூத்துக்குடியில் அனைத்து வசதிகளும் இருப்பது தான் காரணம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கு அரசு முனைப்புடன் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சிப்காட் அருகே சுமார் 1,500 ஏக்கர் பரப்பில் தளவாடப் பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் தளவாடப் பூங்கா தொடங்கப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்படும் தளவாடங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

மேலும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் காற்றாலை நிறுவனம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் ஆகியவை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே சிறு, குறு தொழில் துறையில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்து 3-வது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது.

தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடு செய்து, நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்ணலதா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக அலுவலர் மோத்தா, கிளை மேலாளர் கண்ணன், திட்ட அலுவலர் விஷ்வவாணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x