Published : 09 Dec 2021 03:11 AM
Last Updated : 09 Dec 2021 03:11 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை காணாமல் போன ரூ.45 லட்சம் மதிப்பிலான 453 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி செல்போன்களை கண்டுபிடித்து மீட்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில், ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து, அவை இருக்குமிடத்தை கண்டு பிடித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட353 செல்போன்கள் 3 கட்டமாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பிறகும் சைபர் கிரைம் குற்றப் பிரிவு தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்பி ஜெயக்குமார் தலைமை வகித்தார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் 100 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் டிஐஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஓராண்டில் மட்டும் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் காணாமல் போன ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 453 செல்போன்களை கண்டுபிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சைபர் குற்றம், இணைய தளம், ஆன்லைன் மோசடி, சமூக வலைதளங்களின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலோ அல்லது தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களிலோ பொதுமக்கள் புகார் அளித்தால் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண் 155260-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவல்களை பொதுமக்கள் செல்போனில் சேமித்து வைக்கக்கூடாது. செல்போனில் ஸ்கிரீன் லாக்மற்றும் பேட்டர்ன் லாக் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும். செல்போன் மூலம் அடையாளம் தெரியாத அந்நிய நபர்களுடன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment