Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM
தஞ்சாவூரில் கடன் தொல்லையால் மகனைக் கொன்று, பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா(38). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், திருவையாறில் பேக்கரியும் நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா(33). மகன் வத்சன்(11), தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் தனது சகோதரர் வினோத்துக்கு நேற்று முன்தினம் இரவு ராஜா அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், தான் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார்.
இந்த மெசேஜை நேற்று காலை கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத், ராஜாவின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி, மகனுடன் ராஜா இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீஸார் அங்கு வந்து, ராஜா, கனகதுர்கா, வத்சன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜாவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்றுள்ளார். ஆனால், வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் இருந்ததால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதற்கிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், மனமுடைந்த ராஜா தனது மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT