Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடாததால் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட உடனடியாக ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் எம்.பாலமுருகன் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெருமளவில் கோமாரி நோய் பரவி வருகிறது. தமிழக அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. எனவே, கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. இதனால் பால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்து கால்நடைகளை பாதுகாக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி மீது புகார்
எங்கள் வங்கி கணக்கில் நகை அடமானம் வைத்த பணம் இருந்தும், அதனை விவசாய தேவைகளுக்கு எடுக்க முடியவில்லை. மேலும், கடன் தள்ளுபடி திட்டம் உங்களுக்கு பொருந்தாது என்றும், வட்டியை செலுத்திவிட்டு நகைகளை திருப்பிக் கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர். நகைக்கான பணத்தையே நாங்கள் பெறாமல் எப்படி வட்டி கட்ட முடியும். எனவே, இப்பிரச்சினையில் ஆட்சியர் தலையிட்டு முதல்வரின் அறிவிப்பு படி எங்களது நகைகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’.
பயிர்கள் சேதம்
கயத்தாறு அருகேயுள்ள ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு: ‘‘இந்த பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் லாரிகள் செல்வதற்காக ஓடையை அடைத்து பாதை அமைத்துள்ளனர். இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் விளை நிலங்களில் புகுந்து நாங்கள் பயிரிட்ட நெல், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சேதமடைந்து விட்டன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கிராம மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’.
பெண் தர்ணா
கோவில்பட்டி அருகேயுள்ள திருவேங்கடம் மேற்கு அழகுநாச்சியாபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் மனைவி மாரியம்மாள் (32) என்பவர் தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் அளித்த மனு விவரம்:எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆட்சியர் தலையிட்டு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT