Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM
உதகையில் நடந்த சர்வதேசகுறும்பட விழாவில், சிறந்த படத்துக்கான யானை விருதை இலங்கைபடமான ‘நிலம்' வென்றது.
உதகையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற குறும்பட விழா நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று மாலை விருதுகள்வழங்கும் விழா நடைபெற்றது. அசெம்பளி ரூம்ஸ் செயலாளர் டி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது, "நீலகிரி மாவட்ட இயற்கை எழிலால்கவரப்படும் திரை கலைஞர்கள், இங்கு படப்பிடிப்பு நடத்துவதை விரும்புகின்றனர். மாவட்டத்தின்பூர்வகுடிகளான படுகர் இனத்திலிருந்து தற்போது திரைப்படத் துறைக்கு பலர் வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில், திரைத்துறையில் நுழைய இளைஞர்களின் திறமைக்கு சான்றாக குறும்படங்கள் திகழ்கின்றன" என்றார்.
சுற்றுலா துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் விருதுகளை வழங்கி பேசும்போது, "வனப்பரப்பு அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்தில், வனம் மற்றும் சுற்றுலா துறை ஒருங்கிணைந்து சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் உள்ளோம். இதனால் வருவாய் அதிகரிப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலுள்ள இயற்கை எழிலை ரசிக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், இத்தகைய பட விழாக்கள் நடத்துவதன் மூலமாக, மற்றொரு பரிமாணத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறும்" என்றார்.
இந்த திரைப்பட விழாவின் சிறந்த படமாக தேர்வான இலங்கையைசேர்ந்த நிலம் என்ற படத்துக்கு யானை விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக கிரசென்ட் படத்தில் நடந்த கபீஸ் தருண், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது டான்சிங் குயில் படத்துக்காக மிர்துள் சென், சிறந்த இயக்கத்துக்காக ஓக்ஸ் ஸ்கிரீம் படத்துக்காக ஹபீஸ் ஹசன்வந்த் ஆகியோர் தேர்வாகினர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடர் இன மக்களின் படமான மேஜிக்ரூட்ஸ் மற்றும் படுக படமான வாட்ஸ் அப் படங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், இண்ட்கோ சர்வ் ஆலோசகர் சீனிவாசன் ராம், இயக்குநர்கள் ரவிராசு, என்.ஜே.கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT