Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM
கலப்படம் நடப்பதைத் தடுக்கும் வகையில், வெல்லம், நாட்டுச்சர்க்கரை மற்றும் கருப்பட்டி தயாரிப்பு ஆலைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம், கருப்பட்டி தயாரிக்கும் ஆலைகளில், வெல்லம் வெண்மையாக இருப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட், காஸ்டிக் சோடா மற்றும் இதர வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக தெரியவருகிறது. மேலும், இவற்றில் மைதா, ரேஷன் அரிசி மற்றும் அஸ்கா சர்க்கரையும் கலப்படம் செய்யப்படுகிறது.
ரசாயனம் கலந்த வெல்லத்தை பொதுமக்கள் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, வெல்லம், நாட்டுச்சர்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் இருப்புக் கூடங்களில் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தாத உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இப்பொருட்களில் கலப்படம் கண்டறியப்படுமானால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண் அல்லதுமாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்திற்கு (0424-2223545) தெரிவிக்கலாம், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT