Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் உள்ள கொன்னைக் கண்மாயில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வணிகக் குழுவினரின் கல்வெட்டுகளுடன் கூடிய 10 நினைவுத் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், நிறுவனர், தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமையில் உறுப்பினர்கள் எம்.ராஜாங்கம், பீர்முகமது, ச.கஸ்தூரி ரங்கன், ஆ.கமலம் ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது இதைக் கண்டெடுத்தனர்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோர், போர் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு முற்காலத்தில் நடுகல், வீரக்கல், நினைவுத்தூண் நடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தமிழ கத்தில் முதன் முறையாக ஒரே இடத்தில் கல்வெட்டுகளுடன் கூடிய 10 நினைவுத் தூண்கள் கொன்னைப்பட்டியில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 9 கல்வெட்டுகள் நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. அவை, 5 முதல் 7 அடி உயரமும், அடிப்பகுதி சதுர வடிவிலும், மேற்பகுதி எண்பட்டை வடிவிலும் உள்ளன. இந்த கல்வெட்டுகள் சுமார் 70 செ.மீ நீளம், 30 செ.மீ அகலம் வரையும் உள்ளன.
இவை 1,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. அதாவது, ராஜேந்திர சோழனின் 10-ம் ஆட்சி ஆண்டு முதல் முதலாம் குலோத்துங்கனின் 8-வது ஆட்சியாண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளில், குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் 2 பேருக்கும், மருதன் செட்டி, .ஞ்சக ஞெட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான் , சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத்தூண் வைக்கப்பட்டுள்ளது.
இவை வணிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை ‘ இராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை’ என்று ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. செட்டி, ஞெட்டி ஆகிய பெயர்களை சூட்டிக்கொண்டுள்ளதன் மூலமும் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறியமுடிகிறது என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT